அமைச்சரின் கார் மோதி விபத்து - மனைவியின் கண் முன்னே கணவர் உயிரிழப்பு
சென்னை அருகே அமைச்சரின் கார் மோதியதில் மனைவியின் கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் கார் மோதி விபத்து
சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்தது.
கார் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் கார் மோதியதில் பைக்கில் இருந்த புதுமண தம்பதியினர் சாலையில் துாக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கணவர் ஜான்சன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ரூத்பொன் செல்வி, படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின் போது காரில் அமைச்சர் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற் அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர கார் டிரைவர் காரை ஓட்டி சென்றதாகவும் அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் உயிரிழப்பு
கடலுாரில் உள்ள தனது வீட்டிலிருந்து சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.