நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
நெல்லையில் இளைஞர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்.
இளைஞர் வெட்டிக் கொலை
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பேச்சிராஜன் (24). கட்டிட தொழிலாளியான இவருக்கு வெள்ளத்தாய் (19) என்ற மனைவியும் 3 மாதமே ஆன கைக்குழந்தையும் உள்ளனர்.
இவர் வேலை நிமித்தமாக தனது கிராமத்திலிருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது தச்சநல்லூர் பைபாஸ் சாலை பிரிவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கும்பல், இவரை வழிமறித்து நிறுத்தி தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். தகவல் அறிந்து உறவினர்கள் நண்பர்கள் அப்பகுதியில் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடலை எடுக்க விடாமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் திருநெல்வேலி - மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் அவிநாஷ் குமார், துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் உறவினர்கள் இடமிருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்
அத்துடன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தங்களது கிராமத்தின் வெளியே தொடர்ந்து முகாமிட்டுள்ள உறவினர்கள் பொதுமக்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட பேச்சிராஜன் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக பேச்சிராஜனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.