ஏரியா இளைஞருடன் ஓடிப்போன மனைவி - மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற கணவன்
கோவையில் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக வடமாநில இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் அங்கே கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இன்னொருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை பலமுறை கண்டித்தும் மனைவி கண்டு கொள்ளாமல் இருந்ததால் வடமாநில தொழிலாளி குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வர, ஒரு கட்டத்தில் மனைவி அந்த நபருடன் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வடமாநில இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். 2 குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் ஊஞ்சப்பாளையத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறிவிட்டார். இதை அங்கு நடைபயிற்சியில் இருந்த கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி மற்றும் சின்னச்சாமி ஆகியோர் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் வடமாநில இளைஞர் மின்கம்பத்தின் உச்சிக்கே சென்று மின்கம்பிகளுக்கு இடையில் அமர்ந்து கொண்டார். உடனடியாக அங்கு கூடிய பொதுமக்கள் அவரை கீழே இறங்கும்படி கத்தினர்.
பின்னர் இந்தி பேசத் தெரிந்த ஒருவர் அவசரமாக வரவழைக்கப்பட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது தான் 2 குழந்தைகளுடன் என்னை தவிக்கவிட்டு மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாகவும், தான் உயிர் வாழ விரும்பவில்லை எனவும் கூறினார். மேலும் 2 குழந்தைகளை தனி ஒருவனாக பராமரிப்பது சிரமம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.