விஜய்யின் சேலம் பரப்புரையில் ஒருவர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
விஜய்யின் சேலம் பரப்புரையில் கலந்துகொண்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விஜய் சேலம் பரப்புரை
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தவெகவின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை இன்று நடைபெற்றது.
தவெகவின் தலைவர் விஜய்யின் பேச்சை கேட்க கடும் வெயிலையும் பொருட்படுத்தாது காலை முதலே தவெக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
12;30 மணிக்கு பேச்சை தொடங்கிய விஜய் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.
உயிரிழப்பு
இந்நிலையில், விஜய்யின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சிராஜ் என்ற வடமாநில இளைஞர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் உடனடியாக முதலுதவி அளித்து, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலே சிராஜ் உயிரிழந்துள்ளார்.

மஹராஷ்டிராவை சேர்ந்த 37 வயதான சிராஜ், சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்திற்கு வந்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சீலநாயக்கன்பட்டிசிவசக்தி நகரில் வசித்து வந்துள்ளார்.
வெள்ளி பட்டறை மற்றும் கட்டட வேளையில் சிராஜ் பணியாற்றி வந்துள்ளார்.
நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிராஜ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவரா அல்லது பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்ய வந்த தொழிலாளியா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.