ஏ.சி. வெடித்து விபத்து : தீயில் கருகி இளைஞர் உயிரிழப்பு
சென்னை பெரம்பூரில் ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரம்பூரில் சோகம்
சென்னை பெரம்பூர் திருவிக நகர் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷ்யாம்-க்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் ஷ்யாம் தனது அறையில் உள்பக்கமாக கதவினை சாத்தியபடி தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் , நேற்றிரவு திடீரென ஷ்யாம் அறையிலிருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அவரது தந்தை பிரபாகர் உடனடியாக கதவை உடைத்து பார்த்தபோது ஷ்யாம் தீக்காயங்களுடன் படுக்கையில் அலறி துடித்துள்ளார் .
ஏசி வெடித்து தீ விபத்து
இதையடுத்து உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முயற்சித்த நிலையில் அதற்குள்ளாக ஷ்யாம் படுக்கையில் தீயில் கருகி உயிரிழந்தார்.
அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏசி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஏசி வெடிப்புக்கு மின் கசிவு காரணமா என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.