பள்ளி மாணவர்களை, கொடூரமாக தாக்கும் இளைஞர்கள் : விருத்தாச்சலத்தில் பரபரப்பு
விருத்தாச்சலத்தில் அரசு பள்ளி மாணவர்களை, பேருந்தில் இருந்து கீழே இறக்கி, கொடூரமாக இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் இருந்து, விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை, வயலூர் பஸ் நிறுத்தத்தில், அப்பகுதி இளைஞர்கள் 10 -க்கும் மேற்பட்டோர், இருசக்கர வாகனத்தின் குறுக்கே நிறுத்தி, பேருந்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்களை கீழே இறக்கி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று அரங்கேறியது. இதனால் தாக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், விருத்தாச்சலம்- சென்னை செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
இச்சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் காவல்துறையினர் 25 நபர்கள் மீது வழக்கு பதிந்து, மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு
இந்நிலையில் வயலூர் பகுதியை சேர்ந்த, மாரியப்பன் மகன் விஜயகாந்த், அறிவழகன் மகன் அபிராம், கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜேஷ் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளியான சிசிடிவி வீடியோ காட்சியில், ஐயப்பன் மாலை அணிந்த இளைஞர் ஒருவர், பேருந்தின் முன்பு இருசக்கர வாகனத்தை கொண்டு வழி மறுக்கிறார்.
பின்னர் பேருந்தில் ஏறும் இளைஞர்கள், பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கி, கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்களை 10 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.