16 வயது சிறுமியுடன் காதல்: தடுக்க முயன்ற பாட்டிக்கு நேர்ந்த கதி
கொடைக்கானலில் 16 வயது சிறுமியை ஒரு தலையாக காதல் செய்து கட்டிப்பிடிக்க முயன்ற போது தடுத்த பாட்டியின் கை விரலை கடித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை கிராமத்தில் யுவராஜ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகாமையில் வசித்து வரும் 16 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தெரிந்த சிறுமியின் பெற்றோர் பலமுறை எச்சரித்தும் இளைஞர் தொடர்ந்து காதல் செய்தும், சிறுமிக்கு தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சிறுமியை கையை பிடித்து கட்டிப்பிடிக்க முயன்ற போது சிறுமியின் பாட்டி சாந்தாமணி என்பவர் தடுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சிறுமியின் குடும்பத்தினர் இளைஞரை தாக்க முயன்றுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாட்டியின் கை விரலை இளைஞர் கடித்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் காயமடைந்த சாந்தாமணி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து யுவராஜை சிறையில் அடைத்தனர்.