குறைந்த செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இளைஞர்கள்
கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு பொருட்களை கொண்டு குறைந்த செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்து அனுமதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய இளைஞர்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரு நோயாளியின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு பொருட்களை கொண்டு குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் இருவர் வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நரேஷ், அனிஷ் மேத்யூ. இந்த இரு இளைஞர்களும் இந்திய காங்கிரஸ் மாணவர் படை சார்பில் ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதில் அனிஷ் மேத்யூ பெங்களூருவில் வானியல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதால், நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புதியதாக நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத அளவிற்கு நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகள் தோறும் கூடுதல் படுக்கைகளை தயார் செய்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்ட அனிஷ் மற்றும் நரேஷ் ஆகிய இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்து அதிக செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை இறக்குமதி செய்வதை குறைக்க குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களை கொண்டு ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி காற்றில் உள்ள 21 சதவீதம் ஆக்சிஜனை ஜியோ லைட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தி கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து எடுத்து அதனை ஒரு குடுவையில் சேமித்து வைக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு பொருட்களை கொண்டு 40,000 ரூபாயில் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற வீதத்தில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் படைத்த இயந்திரத்தை தயாரித்துள்ளனர்.
இதன் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 1.25 லட்சம் ஆகும். குறைவான நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, தங்களுடைய இந்த இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அனுமதி கேட்டு அணிஷ் மற்றும் நரேஷ் மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை நேரில் காட்டி அதன் செயல் முறையை விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததோடு, இளைஞர்களின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினார்.