தலைக்கேறிய கஞ்சா போதை...சென்னையில் காவலரை ஓடஓட விரட்டிய இளைஞர்கள்
சென்னை பூந்தமல்லியில் கஞ்சா போதையின் காரணமாக இளைஞர்கள் மூவர், காவலர் ஒருவரிடம் கத்தியை காட்டி விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைக்கேறிய கஞ்சா போதை
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் கஞ்சா போதையில் சபரி, சந்தோஷ், சூர்யா என்ற மூன்று இளைஞர்கள் பணம் கேட்டும், கையில் வைத்திருந்த பட்டகத்தியை வைத்து மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தை விசாரிக்க சென்ற பூந்தமல்லி காவலர் சரவணனையும் அவர்கள் கண்மூடி தனமாக தாக்க முற்பட்டுள்ளனர்.
மடக்கி பிடித்த போலீசார்
கையில் பட்டகத்தியுடன் இளைஞர்கள் மூவரும் சரவணனிடமும் தகராறு செய்ய பயத்தின் காரணமாக அவரும் அங்கிருந்து ஓட அவரை இளைஞர்கள் துரத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளைஞர்கள் மூவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவர்கள் மீது வீட்டில் புகுந்து திருடிய வழக்கு ஒன்று மாங்காடு காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவர அவர்கள் தற்போது மாங்காடு காவல் நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.