திருப்பூரில் போலிஸ் ஜீப்பை திருடிச் சென்ற வாலிபர்.. வசமாக சிக்கியது எப்படி?
திருப்பூரில் சினிமா பட பாணியில் போலீஸ் ஜீப்பை திருடிக் கொண்டு பறந்த நபர், லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்ததால் விஷயம் வெளியானது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜீப்பை திருடியவரை கைது செய்து ஜீப்பை மீட்டு உள்ளனர்.
திருப்பூர் மாநகரின் மையப்பகுதியான, திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அருகில் திருப்பூர் மாநகர தெற்கு போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதன் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் (எண்: டி.என்.39 ஜி 0298) நிறுத்தப்பட்டு இருந்தது.
போலீசார் கட்டுபாட்டு அறைக்குள் இருந்த நிலையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் போலீஸ் ஜீப்பை திருடிக்கொண்டு சினிமா பட பாணியில் சிட்டாக பறந்தார்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த ஜீப்பில் அதிவேகத்தில் சென்ற அவர் எஸ்.பெரியபாளையம் பகுதியில் லாரியில் பலமாக மோதியுள்ளார்.
இதில் ஜீப் கவிழ்ந்ததுடன், அந்த வாலிபரின் கையிலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக பொதுமக்கள் போலீஸ் ஜீப்பை ஓட்டி வந்த வாலிபரை மீட்டு விசாரித்ததில் அந்த போலீஸ் ஜீப்பை திருடி எடுத்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்த பின்னரே போலீசார் அரக்கபரக்க சம்பவ இடத்துக்கு வந்து, அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அந்த வாலிபர் போதையில் இருந்ததும், அவர் திருவண்ணாமலையை சேர்ந்த விஜயன் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கவிழ்ந்து கிடந்த ஜீப்பை மீட்டதுடன், அந்த வாலிபரை சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.