தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: கணவன் குடும்பத்தார் மீது குற்றம்சாட்டிய உறவினர்கள்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்யவிடாமல் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய வலியுறுத்தல்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரைச் சேர்ந்தவர் சரத்குமார்(28). கூலி தொழிலாளியான சரத்குமாருக்கும் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயபாரதி(24) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து ஒரு வயது ஆண் குழந்தையுடன் நாகலிங்கா நகரில் வசித்து வந்தனர்.
திருமணம் முடிந்ததிலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயபாரதி கைக் குழந்தையை தனியாக விட்டுவிட்டு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்துறையினர் ஜெயபாரதியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜெயபாரதியின் தற்கொலைக்கு சரத்குமார் குடும்பத்தாரே காரணம் என புகார் தெரிவித்தும் சரத்குமார் குடும்பத்தாரை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெயபாரதியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய விடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சகாயஜோஸ் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருவதாகவும்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,போராட்டம் நடத்தியவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஜெயபாரதியின் உடலை உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் அனுமதித்தனர்.
இந்த போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.