ஆசை வார்த்தை கூறி தகாத தொழிலில் இளம்பெண்கள்: ராஜா வசமாக சிக்கியது எப்படி?

By Fathima Aug 20, 2021 09:11 PM GMT
Report

தமிழகத்தில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி தகாத தொழிலில் ஈடுபடுத்தி நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கைகள் குவிந்து வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக அரசு மக்களின் நலனின் அதீத அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர், அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ராஜா என்ற நபர் ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ராஜா, திருமணங்கள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு வரவேற்புப் பணியில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை அழைத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறார்.

அவ்வாறு அழைத்து செல்லும் பெண்கள் சிலரை குறிவைத்து, ஆசை வார்த்தைகளைக் கூறி, தகாத தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

மேலும் தன்னிடம் பணியாற்றும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி பல வி.ஐ.பிக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வர மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ராஜா பெண்களை அழைக்கும் ஃபோன் கால் ஆடியோவும், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ராஜாவை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.