5 மாத குழந்தையை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் - கடைசியில் நடந்த திருப்பம்
பெங்களூருவில் 5 மாத குழந்தையை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பாபுஷா பாளையா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அதே பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்த நிலையில் தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே குழந்தை பிறந்த பின் தனது மனைவிக்கு வாலிபர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த செல்போனில் வீடியோ கால் மூலம் வேலைக்கு சென்ற பின் அடிக்கடி தனது குழந்தையை போனில் பார்த்து மகிழ்ந்து வந்துள்ளார். அதேசமயம் பாபுஷா பாளையா பகுதியில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டி வந்த வாலிபர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு 5 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார். மனைவியை காணாமல் அதிர்ச்சியான வாலிபர் இதுகுறித்து பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்த நிலையில் ஆட்டோ டிரைவர் நேற்று குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டதாகவும் என கூறி மனு அளித்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் பெண்ணின் உறவினர்கள் குறித்து விசாரித்தனர்.
இதன்பின் பெங்களூரு போலீசார் குடியாத்தம் போலீசாரிடம் தொடர்பு கொண்டு இளம்பெண் குறித்து கேட்டறிந்தனர். இதனால் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் ஆட்டோ டிரைவரையும், இளம்பெண்ணையும் அழைத்து வந்து அறிவுரை கூறினர். 5 நாட்களாக தாயை காணாமல் 5 மாத பிஞ்சுக்குழந்தை கதறி அழுது துடித்துள்ளது. குழந்தைக்காக மனம் இறங்கி வரும்படி போலீசார் அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை வழங்கினர்.
கடைசியில் அந்த குழந்தையை பெண்ணின் தாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண் தனது கணவருடன் பெங்களூரு செல்வதாக கூறினார். இதையடுத்து போலீசார் இளம்பெண்ணுக்கும், அறிவுரை கூறி கணவருடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.