காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

crime coimbatore younggirlsuicide suicidenews
By Petchi Avudaiappan Mar 11, 2022 07:22 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கோவையில் காதல் கணவருக்காக இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின்  மகள் மாலதி ,  காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்ட நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 

இதனால் மனவருத்தத்தில் இருந்த மாலதி காளியண்ணபுதூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் மாலதி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை என்றும், இது எனக்கு நானே செய்த பரிகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

காதல் கணவருக்காக உயிரை விட்ட இளம்பெண் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Young Woman Commit Suicide In Covai

மேலும் இதுவரை நான் எடுத்த அனைத்து முடிவுகளுமே சரியாக தான் இருந்தது. ஆனால் நான் என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம் தான். எனது கணவருக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர். ஆனால் நான் அது எதையும் கண்டு கொள்ளாமல், போராடி காதலரை கரம் பிடித்தேன். ’

ஆனால் அந்த தோ‌ஷத்தால் எனது கணவர் தினம், தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை. எனது கணவர் உயிரைக் காப்பாத்துறதுக்காக என் உயிரை விடவும் தயாராக இருக்கேன். இது நானே நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இதுக்கு யாரும் காரணம் இல்லை என மாலதி குறிப்பிட்டுள்ளார். 

வாழும் போது தான் யாருக்கும் உதவியா இருக்கவில்லை. சாகும்போதாவது யாருக்காச்சும் உதவியா இருக்க விரும்புறேன். அதனால என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமா கொடுத்து விடுங்கள். நான் எடுத்த இந்த முடிவுக்காக யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என மாலதி அந்த கடித்தத்தில் கூறியுள்ளார். 

இந்த சம்பவம் கோவை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.