பஸ்ஸில் ஆசை வார்த்தை பேசிய இளம்பெண் : லாட்ஜுக்கு சென்ற பக்தருக்கு நேர்ந்த விபரீதம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கடந்த டிசம்பர் 13 தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
திருப்பதி தரிசனம்
ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார். இதற்காக திருப்பதியில் இருந்து காளஹஸ்தி செல்லும் பஸ்சில் பயணம் செய்துள்ளார். அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு இளம்பெண்ணும் அமர்ந்து உள்ளார். பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் இளம்பெண், அந்த பக்தரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.
ஆசை வார்த்தை பேசிய இளம்பெண்
நீண்ட நேரமாக இருவரும் தங்களது குடும்ப விஷயங்களை பேசி கொண்டே சென்றுள்ளனர். காளஹஸ்தி சென்றதும் இருவரும் இறங்கி உள்ளனர். அப்போது அந்த இளம்பெண், லாட்ஜ்க்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். இளம் பெண்ணின் ஆசைவார்த்தைகளை நம்பி அந்த நபரும் சம்மதித்துள்ளார்.
அருகில் இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு சென்று அறை எடுத்து தங்கினர். அப்போது அந்த இளம்பெண், 'திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா' என கேட்டு அவரிடம் கொடுத்துள்ளார். உடனே அவரும் மறுக்காமல் வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
நீண்ட நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த அந்த நபர் பார்த்தபோது, தான் அணிந்திருந்த 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை. பெண்ணையும் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது தான் மயக்க மருந்து கலந்து லட்டு கொடுத்து நகை, பணத்துடன் இளம்பெண் தப்பியது தெரியவந்தது.
இதானால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல்துறையில் புகார் அளிக்க,லாட்ஜில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.