பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் விஞ்ஞானி

By Petchi Avudaiappan Jun 22, 2021 05:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கல்பாக்கம் பயிற்சி விஞ்ஞானி மாயமான நிலையில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி மற்றும் பொதுபணித் துறை போன்ற வளாகங்கள் உள்ளன. இங்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விஞ்ஞானியாக (Category-1 Trainee) கடந்த ஒருவருடமாக பணிபுரிந்து வருபவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்யசாய் ராம் (26). இவர் கல்பாக்கம் குடியிருப்பு பகுதியில் உள்ள சீனியர் ஹாஸ்டலில் தங்கி பணிபுரிகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விடுதியில் இருந்து உடற்பயிற்சி செய்வதற்காக சைக்கிளில் சென்றவர் மீண்டும் அறைக்கு திரும்பவில்லை.

அறையில் உள்ள நண்பர்கள் தேடி நிலையில், அவரது பெற்றோர் நேரடியாக கல்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தேடியபோது அவரது சைக்கிள் வாயலூர் பாலாறு அருகே இருந்தும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், கடலூர் அடுத்த வாயலூர் பகுதியில் பாலாறு முகத்துவாரம் அருகே சத்யசாய் ராம் உடல் பாதி எரிந்த நிலையில், இன்று கூவத்தூர் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டார்.

இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் டிஎஸ்பி. குணசேகரனிடம் கேட்டறிந்தார். மேலும், இதுதொடர்பாக கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.