5 வருட காத்திருப்பு - இந்திய காதலனை கரம் பிடிக்க எல்லை கடந்த பாகிஸ்தான் பெண்!
இந்திய காதலனை திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தான் பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.
எல்லை கடந்த காதல்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த வாலிபர் சமீர் கான். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் செல்போனில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்துள்ளார். சமீர் கான் அந்த பெண்ணை பார்த்ததுமே காதல் வயப்பட்டுள்ளார்.
பின்னர் இது குறித்து தாயாரிடம் விசாரித்தபோது, 'ஜவேரியா கானும்' என்ற அந்த பெண் தாய்வழி உறவினர் என்றும் அவர் பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்தவர் என்றும் சமீர் கானுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சமீர் கான் தனது காதலை ஜவேரியாவிடம் வெளிப்படுத்த, அவரும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கி, பின்னர் கடந்த 2018ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் இருவரும் நேரில் சந்திக்க 5½ ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா வருவதற்கான ஜவேரியாவின் விசா கோரிக்கை 2 முறை இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த மக்பூல் அகமது என்ற சமூக சேவகரின் உதவியால் தற்போது ஜவேரியா கானுமுக்கு 45 நாள் விசா கிடைத்தது.
நேரில் சந்திப்பு
இதனையடுத்து ஜாவேரியா, வாகா எல்லை வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு நேற்று வந்தார். அவரை வருங்கால கணவர் சமீர் கானும் அவரின் தந்தையும் வரவேற்றனர். தற்போது ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின் காதலர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதில் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஜவேரியா "எங்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் எனக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. தற்போது, எனக்கு 45 நாள் விசா வழங்கிய இந்திய அரசுக்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இந்தியாவிற்குள் நுழைந்த தருணத்தில், அனைவரும் என்னை வாழ்த்தினர், அனைவரின் அன்பையும் பெற்றேன்.
எனக்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. சமீர் கானை மணந்துகொண்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக வசிக்க விரும்புகிறேன். கடவுளிடம் தாம் வைத்த வேண்டுகோள் நிறைவேறி உள்ளது. திருமண பந்தத்தில் இணையும் தங்களின் கனவு நனவாகி உள்ளது" என்றார்.