தினமும் இரவில் 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞர்...என்ன காரணம்?

PradeepMehra MondayMotivation Vinod Kapri
By Petchi Avudaiappan Mar 21, 2022 10:56 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரகாண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் 10 கி.மீ. தூரம் ஓடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வரும் பிரதீப் மெஹ்ரா என்பவர் தனது வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு வேலைக்கு வந்து செல்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடும் என்பதால் மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக நொய்டா சாலையில் தினமும் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். இதனை நெடுநாளாக கவனித்த பிரபல பட தயாரிப்பாளர் வினோத் காப்ரி தனது வாகனத்தில் செல்லும்போது பிரதீப்பிடம் வீட்டில் கொண்டு விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை மறுத்த பிரதீப்பின் பின்னணி பற்றி அறிந்து கொள்ள வினோத் காப்ரி ஆர்வம் காட்டினார். 

அதன்படி சாலையின் ஓரம் செல்லும் பிரதீப்பிடம் வாகனம் ஓட்டியபடி பேசி கொண்டே பயணித்துள்ளார். ஏன் ஓடிக் கொண்டிருக்கிறாய் என கேட்க அதற்கு பிரதீப் ராணுவத்தில் சேர்வதற்கு என தெரிவித்துள்ளார். மேலும் காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது என்பதாலும்,  தினமும் காலை 8 மணிக்கு எழுந்து பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

தொடர்ந்து  தாயார் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம்பி ஒருவர் இருப்பதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். இந்த  வீடியோ பதிவை காப்ரி ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். இதனைப் பார்த்த பலரும் குடும்ப சுமையை ஏற்று கொண்டு இலட்சிய நோக்குடன் ஓடி கொண்டிருக்கும் பிரதீப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.