காவல்துறை அவமானப்படுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் - வேலூரில் பரபரப்பு
வேலூரில் காவல்துறை தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரத் என்பவர் நேற்று மாலை மாலை திடீரென மேல்பாடி காவல்நிலையத்துக்கு சற்று தொலைவில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காவல்துறையினர் அவரது வீட்டுக்கு வந்து அவதூறாக பேசுவதாகவும், தனக்கு சொந்தமான நெல் அறுக்கும் இயந்திரத்தை ஓட்டிச்செல்லும்போது நிறுத்தி விசாரிப்பதால் தனக்கு அசிங்கமாக உள்ளது எனவும் அதனால் தான் இப்படி ஒரு முடிவெடுத்ததாகவும் சரத் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீக்குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ள நிலையில் போக்சோ வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சரத்தின் வீட்டுக்குச் சென்று நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வரும்படி கூற, இதை திசை திருப்பவே அந்த இளைஞர் மதுபோதையில் வந்து தீக்குளித்துள்ளார் என ராஜேஷ் கண்ணாவை கூறியுள்ளார்.