10 வருஷ காதல்; காதலன் கொடூர கொலை - பிணவறையில் கதறி அழுத காதலி!
இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
மயிலாடுதுறை, அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் வைரமுத்து(28). இவர் ஒரு டூ வீலர் மெக்கானிக்.
அதே கிராமத்தில் உள்ள பெரியகுளம் அருகே வசிக்கும் குமார் என்பவரின் மகள் மாலினி(26). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
மாலினியின் குடும்பத்தினர் இக்காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்து வேலை செய்யும் டூ வீலர் மெக்கானிக் கடைக்குச் சென்று அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காதலன் கொலை
இதற்கிடையில், மாலினியின் குடும்பத்தினர் வைரமுத்து மீது புகார் அளித்தனர். அதன் பேரில், விசாரணையின் போது, மாலினி தான் வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாலினி வைரமுத்துவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாலினி தனது வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து சில மணி நேரங்களில், இரவு நேரத்தில்
தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வைரமுத்துவை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உடனடியாக கிராமத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அதில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வைரமுத்துவின் குடும்பத்தினர், இச்சம்பவத்திற்கு மாலினியின் குடும்பத்தினரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது போலீசார், மாலினியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.