கந்துவட்டி கொடுமையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு - மக்கள் அதிர்ச்சி
சென்னையில் கந்துவட்டி கொடுமை காரணமாக இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் மக்காராம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த டிரைவரான கந்தன் (28) என்பவர் இன்று காலை வீட்டின் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் போலீசார் உயிரிழந்த கந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து கந்தனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் இறப்பதற்கு முன்னதாக கந்தன் வீடியோ ஒன்றை பதிவு செய்தது தெரிய வந்தது. அதில் ராஜமங்கலத்தில் உள்ள திருப்பதி பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் தான் ரூபாய் 1 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி சரிவர வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் வேலைக்கு செல்லாததால் வட்டியை சரிவர செலுத்த முடியாமல் போனதால் திருப்பதி பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேலு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக தனது மகன் கந்தன் தற்கொலை செய்துகொண்டதால் அதற்கு காரணமான திருப்பதி பைனான்ஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கந்தனின் தந்தை ஜெய்சங்கர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு 15 சதவீத வட்டி என்ற அடிப்படையில் வாரம் பணம் செலுத்த வேண்டும் என்று கந்தன் கடன் வாங்கியது தெரியவந்தது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.