விசாரணைக்காக காவல் நிலையம் வந்த வாலிபர்..பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு

police chennai man station
By Jon Apr 11, 2021 05:41 PM GMT
Report

சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையம் வந்த வாலிபரை போலீசார் தாக்கியதில் மனமுடைந்த வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவிக நகர் கே.சி.கார்டன் 4வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த இமான் (எ) ஜெயக்குமார் (27). இவர்கள் இருவருக்கும் கடந்த 8ம் தேதி வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

இதனால், ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தனது நண்பர்களை அழைத்து வந்து ஆனந்தை அவரது வீட்டில் வைத்து சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும் இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணைக்காக ஜெயக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால், அவர் காவல் நிலையத்திற்கு வராமல் தலைமறைவானார். இதனால், நேற்று ஜெயக்குமாரின் நண்பர்கள் 3 பேரை திருவிக நகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று, ஜெயக்குமார் எங்கே என கேட்டுள்ளனர்.

இந்த தகவல் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததும், திருவிக நகர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை சென்றார். அப்போது, போலீசார், ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ஜெயக்குமார் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் அறுத்துக் கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட மயங்கிய அவரை உடனே, போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.