யூ-ட்யூப் பிரபலம் சூர்யாவுடன் காதல்... தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவி
காதலில் தோல்வியால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் பிரபல யூ-ட்யூபர் சூர்யா மீதும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
யூ-ட்யூப்பில் தனது தாயை ஏமாற்றி அடிவாங்குவது போல பிராங்க் வீடியோ செய்து பதிவிடும் சூர்யா என்பவர் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை- அனுசியா தம்பதியினரின் மகள் தனரக்ஷனா அங்குள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்ட தனரக்ஷனா பிராங்க் யூ-ட்யூப்பர்கள் வெளியிடும் வீடியோக்களில் கேமரா கையாளப்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த பிராங்க் பாஸ் என்ற பெயரில் பிரபலமான யூ-ட்யூப்பர் சூர்யா அந்த மாணவியிடம் அறிமுகமாகி காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் சூர்யாவை சந்தித்து தனரக்ஷனா காதல் குறித்து கேட்டதாகவும், ஆனால் அவரோ உரிய பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஊர் திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த தனரக்ஷனா கையில் நரம்பை அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவரின் உடலை கைப்பற்றி நவல்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் சூர்யா மீதும், அவரது தாய் மீதும் தனரக்ஷனாவின் பெற்றோர்கள் மகளை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைக்காக யூ-ட்யூப்பர் சூர்யாவை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தள பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.