ஒரு வாரத்தில் திருமணம் - தோழியின் வீட்டிற்கு சென்று விபரீத முடிவெடுத்த இளம்பெண்
திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவருக்கு சந்திரபாபு (25) என்ற சகோதரர் உள்ளார். இவர்களது தந்தை பாலாஜி கடந்த 2000 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் கிருஷ்ணவேணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதனால் இருவரும் நிவேதாவும் அவரது சகோதரரும் ஒரகடத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்த இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
திருமண பயம்
இந்நிலையில் நிவேதாவிற்கு, தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உடன் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அம்பத்தூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்ற நிவேதா, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது சகோதரர் சந்திரபாபு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில், திருமணம் காரணமாக கணவர் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும், சமையல் தெரியாது, வீட்டு வேலை செய்ய தெரியாது போன்ற காரணத்தினால் தனது அக்கா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திருமண பயத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பார் என தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இளம்பெண் எடுத்த முடிவு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.