இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பத்தினர்: அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் வேறு மதத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் இளம்பெண்ணை அவர்கள் குடும்பத்தினரே உயிருடன் எரித்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் தங்காட்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜிகினா கிராமத்தில், கடந்த 4ம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தியதில், இறந்தவர் ரஞ்சனா யாதவ் என்ற பெண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில், அப்பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்து வந்ததும், இதற்கு அக்குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அப்பெண்ணை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதும், இதற்காக கூலிப்படையை நியமித்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து 3ம் தேதி அப்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று உயிருடன் எரித்தது தெரியவந்தது.
தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை, சகோதரர், மைத்துனர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டனர்.