திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் பெண் இன்ஜினியர் தற்கொலை
தர்மபுரி அருகே திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ராஜகொல்லஅள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன் என்பவருடைய மகள் ஞானமொழி பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அவரும், தனது உறவினரான குட்டூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முரளிதரனும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே முரளிதரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு முரளிதரன் சம்மதிக்கவே அதிர்ச்சியடைந்த ஞானமொழி குட்டூரில் உள்ள காதலன் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் காதலன் வீட்டில் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஞானமொழி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர்தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ஞானமொழி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஞானமொழியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதியமான்கோட்டை போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக முரளிதரன் அவரது பெற்றோர் தங்கவேல், ராதா ஆகியோர் மீது வழக்கு பதிந்த போலீசார் தங்கவேலை நேற்று மாலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.