கழிவறையில் இறந்து கிடந்த இளம் ஜோடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

Young couple mystery death
By Petchi Avudaiappan Nov 03, 2021 02:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report


சென்னை குன்றத்தூர் அருகே செயல்படாத கம்பெனியில் அழுகிய நிலையில் இளம் ஜோடிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் ஏராளமான கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த கம்பெனி ஒன்று, தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. 

இதனால் அந்த கம்பெனி இரண்டு ஆண்டுகளாக செயல்படாத நிலையில் காவலாளி ஒருவர் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த கம்பெனியின் மேலாளர் கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை செய்வதற்காக பணியாட்களுடன் வந்துள்ளார்.

 அப்போது கம்பெனியின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அங்குள்ள கழிவறையில் இரு சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் சிதிலமடைந்து கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

உடல் முழுவதும் அழுகி இருப்பதால் இறந்து கிடந்தவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. இறந்து போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த கம்பெனியில் தீ விபத்தில் ஏற்பட்டதில் இருந்து இரவு நேரங்களில் சிலர் இந்த கம்பெனியில் உள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

எனவே மூடிக்கிடக்கும் கம்பெனிக்குள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது கம்பிகளை திருட வந்தவர்கள் அந்த வாலிபரை கொலை செய்துவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா? அல்லது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.