குட்டையில் குளிக்கச்சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
வேலூர் அருகே சகோதர, சகோதரிகளுடன் கல்குவாரி குட்டையில் குளிக்கச்சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தொரப்பாடி காந்தி தெருவை சேர்ந்தவர் நவ்சாத் என்பவருக்கு 2 பெண், 2 ஆண் என 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றுள்ளனர். அப்போது மூத்த மகள் நசியா மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக நசியா நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட மற்ற 3 பேரும் கூச்சலிடவே, விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்க முயன்றும் முடியாததால் அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய நசியாவை தேடிவந்தனர்.
ஆனால் மாலை ஆகியும் அவரின் உடல் கிடைக்காததால் நாளை அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடம் மீட்பு படையினரின் உதவியுடன் தேட உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.