யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அம்மன் கோயில் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக நேற்று முந்தினம் யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர். அத்துடன் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி நிதி வசூல் செய்தார்.
இந்நிலையில், கார்த்தி கோபிநாத் மொத்தம் ரூ.34 லட்சம் வசூல் செய்ததாகவும் இத்தொகையில் அவர் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்தி கோபிநாத்தை கைது செய்தனர்.
இந்நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் கோபிநாத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.