குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. அமைச்சர் சேகர் பாபுவிற்கு பதிலடி கொடுத்த தமிழிசை!
தாமரை அரசமைக்கும் காலத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் எனத் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழிசை
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், போரூர் செட்டியார் அக எம் பகுதியில், 16.60 ஏக்கர் பரப்பளவில், 12.60 கோடி ரூபாய் மதிப்பில், தரநிலை சுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்கா பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத் தலைவர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அங்கிருந்த அதிகாரிகளிடம், இதுவரை செய்யப் பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது, அங்கிருந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமரைப் பூ இருந்தன. இதனை கண்ட அமைச்சர் சேகர்பாபு, குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது என அதிகாரிகளிடம் நையாண்டியைத் தெரிவித்தார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது:
அரசு அமைக்கும் பூங்காவில் குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர்பாபு அவர்கள்.குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.
பதிலடி
அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள். அரசுஅமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
நீங்கள் காலம் காலமாகக் கூவத்தைச் சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்.இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்.
இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்...என்று தெரிவித்துள்ளார்.