பாஜகவில் பூதாகரமாகும் யோகி - மோடி மோதல்.. உத்திரப் பிரதேசம் என்னவாகும்?
உத்திரப் பிரதேச மாநிலம் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்திரப் பிரதேசம் இருந்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் உ.பி மாநில நிர்வாகத்தின் மீது பாஜக தேசிய தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் ஷர்மாவை பாஜக உபி மேலவை உறுப்பினராக நியமித்திருந்தது. மேலும் அவரை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என பாஜக தலைமை யோகியை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் யோகி இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் உ.பி தலைமைக்கும் பாஜக தேசிய தலைமைக்கும் இடையே கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தீர்க்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருகிறது.

அதே சமயம் தற்போது உ.பியில் பணியாற்றிய அனூப் சந்திர பாண்டேவை தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்துள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த நியமனம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. உத்திரப் பிரதேச தேர்தலை மனதில் வைத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த நியமனம் பலத்த சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.
இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் உ.பியை வென்றதால் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இதனால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக பாஜக விளங்குவது குறிப்பிடத்தக்கது.