யோகி ஆதித்யநாத் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சில தினங்களுக்கு முன்பு கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது சில இடங்களில் கடைகளை அடைக்கச் சொல்லி பாஜகவினர் வாக்குவாதம் செய்ததால் பதற்றம் நிலவியது. யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும் அவர், “மோடி, அமித் ஷா, நட்டா என பாஜக தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் தமிழகத்திற்குப் படையெடுக்கின்றனர்.
அவர்கள் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. மோடி வந்தவுடன் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடக்கிறது. இது பாஜவுக்குக் கைவந்த கலை. பாஜக, அதிமுகவினர் வீடுகளில் சோதனை கிடையாது. திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது.
பெண்கள் நலன் பற்றிப் பேச அருகதை அற்ற கட்சி பாஜக. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.
ஏப்.6-க்குப் பிறகு போலீஸாரைக் காட்டிலும், நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிப்போம். தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது.” என்றார்.