பத்து ஆண்டுகளில் 6,500 தொழிலாளர்கள் பலி: கத்தாரில் என்னதான் நடக்கிறது?
மத்திய கிழக்கு நாடான கத்தாரில் கடந்த பத்து ஆண்டுகளில் 6,500க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரழந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்தி தெரியவந்துள்ளது.ஆங்கில நாளிதழ் ஆன கார்டியன் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, நேபாள், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கத்தாரில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பரபரப்பளவில் மக்கள் தொகையிலும் சிறியது என்றாலும் உலகின் பணக்கார நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாரின் அபரிவிதமான எண்ணெய் வளம் அதன் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது. உலக நாடுகளிலிருந்து வேலை தேடி தொழிலாளர்கள் அதிகம் கத்தாருக்கு வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு வருபவர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனை கத்தார் மறுத்துள்ளது. கத்தார் குடிமக்கள், வெளிநாட்டினர் என அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்படுவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. 2022-ம் கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலககோப்பைக்கான தயாரிப்பு பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தொழிலாளர்கள் அனைவரும் அதற்கான பணிகளில் இருந்தபோது தான் உயிரழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு கத்தார் கால்பந்து உலககோப்பை நடத்துவதற்கான அனுமதியை பெற்றது. அதற்குப் பிறகு தான் பிரம்மாண்டமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களின் மரணங்களும் அதற்குப் பிறகு தான் அதிகரித்திருக்கிறது என கார்டியன் செய்தி தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளை ஆமோதித்துள்ள கத்தார் அரசு தொழிலாளர் மரணங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தொழிலாளர்கள் பற்றிய தகவல்களும் சம்மந்தப்பட்ட அரசாங்கங்களால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.