ஆசன வாய்க்குள் தங்கம் கடத்திய நபர்கள்: எக்ஸ்ரேவில் தெரியவந்த உண்மை
வளைகுடா நாடான சார்ஜாவிலிருந்து கோயம்புத்தூருக்கு தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு என்பதால் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து மட்டும் தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அதிகாரிகள் முறையான பரிசோதனை செய்து வருகின்றனர், சந்தேகப்படும் படியாக இருந்தால் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்துவார்கள்.
இந்நிலையில் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை துணை இயக்குனர் சதீஸ் தலைமையில் அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த சிவகங்கை, திருச்சி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 5 வாலிபர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் 5பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் ஏதும் சிக்கவில்லை. தொடர்ந்து அவர்களின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்களை தனித்தனியாக அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.
அப்போது அவர்களில் சிலர் தங்கத்தை பொடியாக்கி, அதில் பசை கலந்து டேப்சுற்றி ஆசன வாய் பகுதியிலும், ஒரு சிலர் தங்கத்தை பொடியாக்கி மாத்திரை வடிவில் உருவாக்கி அதனை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து 5 பேரையும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இனிமா கொடுத்து குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் மாத்திரை வடிவில் இருந்த தங்கத்தை வெளியே எடுத்தனர்.
இந்த 5 பேரிடம் இருந்து மொத்தம் 6 கிலோ 642 கிராம் பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் தங்கத்தை கடத்தி வரும் குருவியாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதை யார் செய்யச் சொன்னார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.