2 ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டு வெடித்து 4 பேர் காயம்

ஜெர்மனியில் 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டு வெடித்து 4 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜெர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. அங்கு, ஆண்டொன்றுக்கு 2000 டன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

இதனிடையே ஜெர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 ஆம் உலகக் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

விபத்து நடைபெற்ற பகுதியை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த  நிலையில் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பவேரியாவின் மாநில உள்துறை அமைச்சர், வெடிகுண்டு தோராயமாக 550 பவுண்டுகள் எடை இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஜெர்மனியில் கட்டுமான வேலையை தொடங்கும் முன், கட்டுமான தளங்களில் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லை என சான்றளிக்கப்பட வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்