தன்னை தானே கடத்திக்கொண்ட நபர் - ஒரு எழுத்துப்பிழையால் சிக்கிய பரிதாபம்
தன்னை தானே கடத்திக்கொண்டு நபர் எழுத்துப்பிழையால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.
சகோதரர் கடத்தல்
உத்திரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள பண்டாரஹா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் ஒப்பந்ததாரராக உள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி, இவரது சகோதரர் சந்தீப் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், தனது சகோதரர் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க ரூ.5000 கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எழுத்துப்பிழை
மேலும், தனது சகோதரர் கயிற்றால் கட்டப்பட்டுள்ள 13 வினாடி வீடியோ ஒன்றையும் காவல்துறையிடம் சமர்பித்துள்ளார். சஞ்சய் குமாருக்கு வந்த குறுஞ்செய்தியில் பணம் கொடுக்கவில்லை என்றால் உயிரிழப்பு நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
இதில் DEATH என்பதற்கு பதிலாக DETH என எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 என்ற தொகை காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது
இதனையடுத்து, சந்தீப்பின் தொலைபேசி எண் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர், கடத்தப்பட்டது தொடர்பாக ஒரு கடிதம் எழுத கூறினர். அப்போது DETH என்ற எழுத்து பிழையுடன் எழுதினார். இதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தன்னை தானே கடத்தி நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன்னர் சந்தீப் முதியவர் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு இழப்பீடு வழங்க பணம் தேவைப்பட்ட நிலையில், இந்த நாடகத்தை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தீப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.