”நான் தவறாக எதுவும் பேசவில்லை” - ஆ.ராசா தேர்தல் ஆணையத்தில் விளக்கம்
முதலமைச்சர் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து, ஆ.ராசா தன்னுடைய விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு பேக்ஸ்புக் மூலம் அனுப்பியுள்ளார். திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் பற்றிய பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.
ஆ.ராசாவின் பேச்சை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி கண்கலங்கினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல, என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மனம் வேதனை அடைந்துள்ளேன். மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.

இந்நிலையில், ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். மேலும் ஆ.ராசா இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, ஆ.ராசா தன்னுடைய விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். அரசியல் தொடர்பான ஒப்பீடுகளை மட்டுமே பேசியதாகவும் வேறு எந்த உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கழக துணை பொதுச்செயலாளர் திரு. @dmk_raja MP அவர்கள், தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள விளக்கம்: pic.twitter.com/hpFUF51aGK
— DMK (@arivalayam) March 31, 2021