பாலியல் துன்புறுத்தல் புகார்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி
பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்த நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் தொடர் தர்ணா போராட்டத்தை அடுத்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா
டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் வீரர்கள் செய்தியாளர்கள் பேசுகையில், மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்றும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது சில குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தூக்கில் தொங்க தயார்
இது குறித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அப்படி எதாவது நடந்திருந்தால் நான் தூக்கில் தொங்க தயார் என்று பதிலளித்தார்.
7 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அவசர கூட்டம் அயோத்தியில் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரிஜ் பூஷன் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களின் கோரிக்கையையேற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.

இடைக்கால தடை
இந்நிலையில், மேற்பார்வை கமிட்டி அமைக்கப்பட்டு அதன் விசாரணை தொடங்கும் வரை, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இடைக்கால தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி நடப்பு தரவரிசைப் போட்டியின் இடைநிறுத்தம் மற்றும் நடப்புச் செயல்பாடுகளுக்கு பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட நுழைவுக் கட்டணத்தைத் திருப்பி வழங்குவது ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.