பிரியாணி தால்சாவில் மிதந்து வந்த புழு..தட்டி கேட்ட மாணவர்களை கைது செய்த போலீஸ்..!
பிரியாணி கடையில் தனியார் கல்லுாரி மாணவர்கள் சாப்பிட்ட உணவில் புழு இருந்ததாக புகார் அளித்த இளைஞர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் தனியார் கல்லுாரி மாணவர்கள் பிரியாணி சாப்பிட கடந்த 25 ஆம் தேதி வந்துள்ளனர்.
அப்போது பிரியாணிக்கு வழங்கப்பட்ட தால்சா என்ற குழம்பில் புழு இருப்பதை அறிந்த மாணவர்கள் கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதை கண்டுகொள்ளாத ஊழியர்கள் வழக்கம் போல் உணவு பரிமாறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் உணவுப்பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளனர்.அங்கு வந்த அதிகாரிகள் உணவினை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பணம் பறிப்பதற்காக பிரியாணியில் புழு இருப்பதாக பொய் புகார் கூறியதாக கூறி மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர் போலீசார்.
இதையடுத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனிடையே பிரியாணி கடையின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மேலும் மாணவர்களை கைது செய்த போலீசாரை நீதிபதி கண்டித்தார்.