உலகின் தனிமையான திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ..
42 ஆண்டு காலமாக சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்தி கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கனடாவில் நயகாரா நீர்விழ்ச்சிக்கு அருகில் மரைன்லேண்ட் என்ற கடல்வாழ் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. அங்கு கிஸ்கா என்ற ஓர்க்கா வகை திமிங்கலம் சுமார் 42 ஆண்டு காலமாக சிறைபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திமிங்கல சரணாலய திட்டத்தின் கீழ் இந்த திமிங்கலம் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து கடல் பகுதியில் வாழ்ந்த கிஸ்கா, தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த மாதம் சமூக ஆர்வலர் பில் டிமர்சர்லியர் மரைன்லேண்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கடும் மன உளைச்சலில் இருந்த கிஸ்கா திமிங்கலம், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வகையில், சுற்றுச் சுவர்களில் தன் தலையைக் கொண்டு அடிக்கடி மோதியுள்ளது.
இதனைப் படம்பிடித்த அவர், தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்திலும் பதிவிட்டு, திமிங்கலத்தின் நிலை குறித்து விளக்கியுள்ளார். அதேநேரத்தில் மரைன்லேண்ட் பூங்காவில் இருந்து அந்த திமிங்கலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். அவரின் இந்தப் பதிவைப் பார்த்த மற்ற சமூக ஆர்வலர்கள், உலகின் தனிமையான திமிங்கலமாக வசித்து வரும் கிஸ்காவை உடனடியாக பூங்கா நிர்வாகம் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கிஸ்கா திமிங்கலத்துக்கு தற்போது 44 வயதாகிறது. 1979 ஆம் ஆண்டு பிறந்த இந்த திமிங்கலம் 2 வயதானபோது மரைன்லேண்ட் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு வந்தபிறகு 5 குட்டிகளை கிஸ்கா ஈன்றுள்ளது. அவை அனைத்தும் மிக குறுகிய காலம் மட்டுமே உயிருடன் இருந்துள்ளன. அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை குட்டி திமிங்கலங்கள் இருந்து பின்னர் இறந்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண் திமிங்கலத்தின் துணையும் இன்றி 10 ஆண்டுகளாக கிஸ்கா தனிமையில் வசித்து வருகிறது. பொதுவாக, டால்பின் மற்றும் திமிங்கலங்கள் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்பவையாக இருந்தாலும் கிஸ்காவின் அணுகுமுறைகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.