WorldWaterDay2023 - தாயை பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே : முதலமைச்சர் ஸ்டாலின்
ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது , இந்த நிலையில் தண்ணீர் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அதில் முதலமைச்சர் கூறியதாவது
தண்ணீர் தினம்
உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது.
அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்" எனக் கூறுகிறது. தண்ணீர் என்று சொல்லாமல் 'அமிழ்தம்' என்றவர் திருவள்ளுவர்.
#WorldWaterDay2023-இல் #கிராமசபைக்கூட்டம் ஏன்? தமிழரும் தமிழ் இலக்கியங்களும் தண்ணீரைப் பற்றிச் சொன்னது என்ன?#SaveWater pic.twitter.com/WkplnsayQl
— M.K.Stalin (@mkstalin) March 22, 2023
மனித உடலில் தண்ணீரின் அளவு கூடினாலும், குறைந்தாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவப் புலமையுடன் 'மிகினும் குறையினு நோய் செய்யும்' என்றார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகுத் தமிழில் சொல்கிறது. நமது உடலில் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்பட தண்ணீர் மிகமிக அவசியம்.
நீரை வீணாக்க கூடாது
மனிதரால் பல நாட்கள் இருக்க முடியும். ஆனால் நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும்.
இன்றைக்கு ஒரு நாட்டின் வளமானது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மைக் காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். தண்ணீரைக் காப்போம். தாய்நிலத்தைக் காப்போம். நன்றி. வணக்கம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.