ஒத்த ஷூவின் படம் - ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பி பார்க்க வைத்த 11 வயது சிறுமி!
பள்ளி சிறுமியின் ஷூ ஒன்று ஒரே நாளில் ஒட்டுமொத்த இணையத்தையும் தன் வசம் ஈர்த்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை தான் ரியா புல்லோஸ். 11 வயதே ஆகும் இந்த சிறுமி தடகளத்தில் பள்ளி அளவில் பதக்கங்களை வென்று வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தடகள போட்டியில் கலந்துக்கொண்டு 3 பதக்கங்களை வென்றார்.
ஆனால் அவர் வென்ற விதம் தான் ஆச்சரியமே. டிசம்பர் 9ம் தேதி நடந்த இந்த போட்டிகளில் 400 மீ, 800 மீ, 1,500 மீ என மூன்று சுற்றுகளிலும் பதக்கம் வென்றார். இந்த 3 சுற்றுகளிலும் பங்கேற்க அவரிடம் ஷூக்கள் ஏதுமே இல்லை.
வெறும் கால்களில் பேண்டேஜ்களை கொண்டு ஷூ மாதிரியான ஒன்றை அவரது குடும்பத்தினர் தயார் செய்து கொடுத்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அதில் "நைக்" நிறுவனத்தின் லோகோவை பதிவிட்டிருந்தனர்.
அதுபோன்ற ஒரு காலணியை வைத்துக்கொண்டு பதக்கம் வென்றதை பார்த்த ஊர்மக்கள் சிலர், அதனை புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் அதிகளவில் பரப்பினர். மேலும் அந்த சிறுமி தொடர்ந்து விளையாட்டு துறையில் சாதிக்க யாரேனும் முன்வந்து உதவ வேண்டும் எனக்கோரி வந்தனர்.
இன்னும் சிலர் பிரபல ஷூ நிறுவனமான "நைக்" நிறுவனத்திடம் அந்த சிறுமிக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஷூக்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். புல்லோஸை போன்றே ஷூ அணிந்திருந்த மேலும் 2 சிறுமிகளுக்கும் தரக்கோரி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த 3 சிறுமிகளுக்கும் பல உதவிகள் குவிந்து வருகின்றன. அவருக்கு உண்மையான நைக் ஷூக்கள், காலணிகள், துணிகள் என பலவற்றை அன்பு பரிசாக வழங்கி கவுரவப்படுத்தி வருகின்றனர். விரைவில் இதுகுறித்து நைக் நிறுவனமே வாய்த்திறக்க வாய்ப்புள்ளது.