ஆப்கானிஸ்தானில் வாட்டி வதைக்கும் கடும் பஞ்சம் - சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்கள்

world viral news Afghanis Famine
By Nandhini Jan 26, 2022 09:38 AM GMT
Report

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதனையடுத்து, அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வருமானத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில், கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அந்நாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருகிறார்கள் என்று பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தகவல் தெரிவித்துள்ளார்.

வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள கிராமங்களில், மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகவும், 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு உதவுமாறு தலிபான் பிரதிநிதிகள் உலக நாடுகளிடம் உதவி கேட்டிருக்கிறார்கள்.