கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி : இந்தியாவுக்கு வர அழைப்பு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், சிக்கலான தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது -
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என நான் நம்புகிறேன். அவர் விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸ் பேசியதாவது -
உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியபோது, பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல ஆதாரமாக இந்தியா விளங்கியது. அதே போல் கொரோனாவால் இந்தியா பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பை உணர்ந்து அமெரிக்கா உதவியதை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.

