விண்வெளியில் தங்களுக்கென்று ஆய்வு மையம் அமைத்த சீனா : பத்திரமாக பூமிக்கு திரும்பிய 3 வீரர்கள்
விண்வெளியில் தங்களுக்கென்று ஒரு ஆய்வு மையத்தை சீனா அமைத்துள்ளது. இந்நிலையில், அப்பணியில் ஈடுபட்டிருந்த 3 வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச அளவிலான ஆய்வு மையத்தை அமைத்திருக்கின்றன.
இதற்கு போட்டியாக சீனாவும் தனியாக ஒரு விண்வெளி மையத்தை அமைத்திருக்கிறது. பூமியிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்மையத்தை கடந்த 3 மாதங்களாக 3 சீன வீரர்கள் அமைத்து வந்தார்கள். இப்பணிகளை வெற்றிகரமாக முடிந்துள்ளனர்.
இந்லையில், அவர்கள் ஷெங்ஜூ என்ற விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் வந்த விண்கலம் சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கும் காட்சிகளை சீன அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட விண்கலத்திலிருந்த வீரர்கள் பூமிக்கு அருகில் வந்தவுடன் பாராசூட் மூலம் தரையிறங்கினார்கள்.
பின்னர் அவர்களை தொழில்நுட்ப பணியாளர்கள் உரிய முறையில் பாராசூட்டிலிருந்து வெளியேற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து 3வது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்பி வருகிறது. இதுவரை 13 சீனர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

