ஆப்கன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நடுவே திரைச்சீலை அமைத்து வகுப்புகள் - தாலிபானின் ஆட்சியின் நிலை
ஆப்கானிஸ்தானில் இன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், அனைத்து வகுப்புகளை திரைச்சேலை மூலம் பிரித்து ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத படி மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கிட்டதட்ட 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில், காபூல், கந்தகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி இருக்கின்றன. மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் தனித்தனியே வகுப்புகள் நடைபெறும் என்று ஏற்கனவே தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.
அதனையடுத்து, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் அனைத்தும் திரைச் சேலை மூலம் சரி பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. திரைக்கு ஒரு புறம் மாணவர்களும் மறுபக்கம் மாணவிகளும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
காபூல் அவிசன பல்கலைகழக வகுப்பறைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாலிபான்கள் பெண்களுக்கு என்ன உரிமைகள் வழங்க போகிறது என்று உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், கல்விக்கூட வகுப்பறையிலிருந்து பாலின பாகுபாட்டை தொடங்கியிருப்பது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.