தாலிபானை ஆள இருக்கும் முல்லா பராதர் பாகிஸ்தான் குடிமகனா? பாஸ்போர்ட் படம் வைரலானது
ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில், அரசு அமைப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தாலிபானின் இணை நிறுவனர், முல்லா அப்துல் கானி பராதர் புதிய ஆப்கானிஸ்தானின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முல்லா அப்துல் கானி பராதரின் 'பாகிஸ்தான் பாஸ்போர்ட்டின்' புகைபடங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கானி, பராதர் (சகோதரர்) என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் 2020ம் ஆண்டில் முஹம்மது ஆரிஃப் அகா என்ற பெயரில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டைப் பெற்றார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், முல்லா அப்துல் கானி பராதர் மற்றும் முஹம்மது ஆரிஃப் ஆகா ஆகியோர் ஒரே நபர் அல்ல என்றும் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் பராதரின் முகத் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றும் தலிபான்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் பாஸ்போர்ட் குறித்த அத்தியாயத்தில், ஜூன் 25, 2020 அன்று, ஆப்கானிஸ்தானின் காமா பிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முல்லா பராதர் பாஸ்போர்ட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையையும் வைத்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
முஹம்மது ஆரிஃப் ஆகா என்னும் கற்பனையான அடையாளத்தின் கீழ் பராதருக்கு, பாகிஸ்தான் அடையாள ஆவணங்களை வழங்கியதாக அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் முன்னாள் அதிகாரியை மேற்கோள் காட்டி இந்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
