ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரிதான் - தாலிபான் செய்தி தொடர்பாளர் பேச்சு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டன. தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தாலிபான்களின் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தார்கள்.
இதனையடுத்து, ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தாலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஈரான் நாட்டிலுள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தாலிபான்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் இயக்கத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. தாலிபான்களின் தலைவரான முல்லா 'ஹைபத்துல்லா அஹுன்ஸாடா' புதிய அரசாங்கத்தில் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார் என்று தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் 'அனாமுல்லா சமங்கனி' தகவல் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அரசினை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தாலிபான் செய்தித் தொடர்பாளர் 'ஜபிஹுல்லா முஜாஹித்' இன்று காபூலில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், "போர் முடிந்துவிட்டது, நிலையான ஆப்கானிஸ்தான் வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி" என்றார்.
