தாலிபான்களின் இந்த கணக்குகளை எல்லாம் பிளாக் - அதிரடி காட்டிய கூகுள்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசின் பல மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக பிளாக் செய்துள்ளது.
முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவர்களின் சர்வதேச பங்காளிகளால் விட்டுச்செல்லப்பட்ட முக்கியமான டிஜிட்டல் ஆவணங்கள் கசியக்கூடும் என்ற அச்சத்தில் கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆப்கானில் தாலிபான் (Taliban) ஆக்கிரமிப்பு பற்றிய பல வித மதிப்பீடுகளை தவிடுபொடியாக்கிய தாலிபான் போராளிகள், காபூலை ஒரு சில நாட்களிலேயே கைப்பற்றினார்கள்.
இந்த சூழ்நிலையில், வெளிநாட்டு அதிகாரிகள் அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டி உள்ளது. இதனால், பல முக்கிய ஆவணங்களும் பின்தங்கிவிட்டன. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், கூகிள் நிறுவனம் (Google) ஆப்கானிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும், தேவையான கணக்குகளை பாதுகாக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூகுள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ஒருவர், தாலிபான்கள் முன்னாள் அரசாங்க அதிகாரிகளின் கணக்குகளை அணுக விரும்புவதாக தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்த தகவல்கள் தாலிபான்களின் கைகளுக்கு செல்லாத வகையில், முக்கிய சில கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
உள்ளூர் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அதிபர் நெறிமுறை அலுவலகத்துடன், நிதித்துறை, தொழில், உயர்கல்வி மற்றும் சுரங்கத் துறைகளைச் சேர்ந்த சுமார் இரண்டு டஜன் அதிகாரிகள், அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புக்குப் கூகிளை பயன்படுத்தி வந்தனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆக்கிரமித்த பிறகு, தாலிபான்கள் பயோமெட்ரிக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊதிய தரவுத்தளங்களை தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
அஷ்ரப் கானி அரசாங்கத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தாலிபான்கள் முன்னாள் அதிகாரிகளின் மின்னஞ்சல்களைப் பெற முயற்சி செய்து வருகின்றனர். கடந்த மாதம், அவர் பணிபுரிந்த அமைச்சகத்தின் சேவையகங்களில் சேமிக்கப்பட்ட தரவைப் பாதுகாக்குமாறு தாலிபான்கள் தன்னிடம் கேட்டார்கள். இந்த காரணத்தால்தான் தான் தலிபான்களின் பேச்சைக் கேட்காமல் தலைமறைவாக இருக்கிறேன் என்றார். உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.