“பயங்கரமான டெல்டா கொரோனா இவர்களை மட்டும் அதிகம் பாதிக்காது”– ஆய்வில் வெளியான தகவல்
கொரோனா 2ம் அலை இந்தியாவை உலுக்கி எடுத்துவிட்டது. விமான பயண தடை, இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் 1 வாரம் கட்டாய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை பல நாடுகள் விதித்தன.
இதற்கு முழுமுதற் காரணம் இந்தியாவில் உருமாற்றமடைந்த டெல்டா கொரோனா தான். வைரஸ்களில் இயல்பே உருமாறுவது தான். வைரஸ் உருமாறும்போது வீரியத்தையும் இழக்கவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும். அப்படி உருமாறி வீரியம் அதிகமானதுதான் டெல்டா வகை கொரோனா. இந்த கொரோனா இந்தியாவிலேயே உருவாகி இந்தியாவையே உருக்குலைத்து விட்டது.
இந்த வைரஸ் நுரையீரல் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு தீவிரப் பாதிப்பையும் உண்டாக்கக்கூடியது. இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா பிளைட் பிடித்து வெளிநாடுகளுக்கும் சென்றது. அமெரிக்கா, சீனா, நியூஸிலாந்து, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவியது.
குறிப்பாக அமெரிக்காவில் அடுத்த அலை உருவாகவும் டெல்டா காரணமாக இருந்தது. இந்நிலையில், டெல்டா கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் முடிவில் அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் முதலே கொரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு டெல்டா வகை தான் காரணம்.
ஆனால் பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி போட்டுவிட்டதால் டெல்டா கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. மிகவும் குறிப்பாக 0-17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலேயே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தடுப்பூசி போடும் பட்சத்தில் மிக குறைந்த அளவிலேயே குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.